728x90 AdSpace

Trending

Ok

போக்குச்சொல்ல! : பாஸ்டர் . தாமஸ் - தமிழ் பிரசங்கங்கள் | Tamil Christian Message | Sermon Notes

போக்குச்சொல்ல!

Stop Making Excuses, Start Making Progress
தமிழ் பிரசங்கங்கள் | Tamil Christian Message | Sermon Notes

இயேசு மிகவும் மென்மையானவர் என்று தெரியும். ஆனால் ஆவியானவர் மிக மிக மென்மையானவர். ஆகையினாலே நம் வாழ்க்கையில் குறைகள் வரும்பொழுது ஆவியானவர் அமர்ந்து இருந்துவிடுகிறார். இயேசுகிறிஸ்து பன்னிரண்டாவது வயதில் தேவாலயத்திற்கு போனபொழுது அவ்விதமாய் ஒரு சம்பவம் நடந்தது. அவருடைய உலகப்பிரகாரமான தாயாரும், தகப்பனாரும்  தங்கள் உறவினர்களோடு, கூட்டத்தில் வந்துக் கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டுப் போனார்கள்.  அவர்கள் எந்த இடத்தில் இயேசுவை விட்டார்களோ அதே இடத்திற்கு மறுபடியும் போனார்கள். அங்கு கண்டுபிடித்தார்கள்.

 அநேக மக்களுடைய வாழ்க்கையில் ஆவியை இழந்து எத்தனையோ நாட்கள்  ஆனால் எங்கே இழந்தோம், எதிலே ஆவியானவரைத் தவறவிட்டோம், என்பதை நினைப்பதேயில்லை. ஆவியில் நிறைகிறோம், அந்நியபாஷை வருகிறது, அவர் நம்மோடுகூடத்தான் இருக்கிறார்,  என்று நினைத்துக் கொண்டு நாம் விருப்பம் போலப் போகிறோம். ஆவியானவர் விலகினபின்பு சவுல் 38 வருடம் இஸ்ரவேல் தேசத்தை ஆண்டான் என்பதை மறந்துவிடக்கூடாது.

 நான் ஒருமுறை கடுமையான உபவாசத்தில் இருந்தேன். அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் முன்னணியில் நிற்கிற அநேகருடைய நிலைமையை எனக்குக் காட்டினார்.   வாழ்க்கை சீர்கெட்டு, அதைப் பற்றி உணர்வில்லாமல் வாழ்க்கை முழுவதும் கறையும் திரையுமாய் மாறிவிட்ட பலரை கர்த்தர் காட்டினார்.  தேவ ஆவியானவர் நம்மேல் மிகவும் மனதுருகுகிறவர். பொல்லாத ஆகாப் மனந்திரும்பினபொழுது அவனிடத்தில் திரும்பி தயவு காட்டின கர்த்தர்.

  நம்முடைய வாழ்க்கை சீர்படுவதாக.   எலிப் பொறிக்குள் வைக்கப்பட்டிருக்கும் சிறு ரொட்டித் துண்டிற்காக அதனுள் நுழையும் எலியின் நிலை அந்தோ பரிதாபம்.    இதுபோல சாத்தான் நிலையற்ற சந்தோஷத்தை நமக்கு அளித்து நிரந்தர வேதனையைத் தருவதற்கு   பொறி வைத்துள்ளான். அவனுடைய வலையில் நாம் விழலாமா? மாம்சமான யாவர்மேலும் ஆவியை ஊற்றுகிற கர்த்தர் இந்த நாளில் உங்கள் மேலும் தம்முடைய ஆவியை ஊற்றக் காத்திருக்கிறார்.

 “அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள்”(லூக்.14:18). ஆங்கிலத்தில் அவர்கள் ஒருமனதோடு போக்குச்சொல்ல ஆரம்பித்தார்கள். ஏதாவது காரியம்   செய்யாமலிருக்க அவன் போக்கைக் கண்டுபிடிக்கிறான்.

 ஆதி மனிதனாகிய ஆதாம் சொல்லிவிட்டான் நீர் எனக்கு தந்த இந்த ஸ்திரீ பழத்தைப் பறித்து என்னிடத்தில் தந்தாள், நான் சாப்பிட்டேன்  அவன் சொன்னது உண்மைதான், ஆனால் ஆண்டவரிடத்தில் அவன் சொல்லக்கூடிய சாக்குப்போக்கு அல்லவே அல்ல. அவளல்ல குற்றவாளி, அவன் குற்றவாளி, உன் நிமித்தமாய் பூமி சபிக்கப்பட்டிருக்கும், அவள் நிமித்தமாய் அல்ல. எவனிடத்தில் கொடுக்கப்படுமோ அவனிடத்தில் கேட்கப்படும்.

 அந்த ஆதாமின் பரம்பரையில் வந்த நாமும் சமயத்திற்கேற்றபடி போக்குச் சொல்லுவோம். அநேகர் பாவத்தில் வாழ்வதற்கு சாக்குப்போக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.   அதின்மேல் ஜெயம் எடுப்பதற்கு ஆண்டவர் பெலன் தருவார். அவருடைய ஜெயத்தை  ஆவியானவருடைய ஒத்தாசையைத் தேடவேண்டும்.

 என்னால் முடியாதப்பா, நீர் என்னைப் பரிசுத்தப்படுத்த முடியும், நீர் என்னைப் பரிசுத்தமாய் காக்கமுடியும். ஆண்டவர் ஜெபம்   தீமையிலிருந்து எங்களை விலக்கிக் காத்துக் கொள்ளும்.  எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும் (மத்.6:13). சோதனை வரும்பொழுது போக்குச் சொல்லிக் கொண்டிருக்கவேண்டாம். ஆண்டவரே நான் பாவம் செய்தேன் என்று சொல்லவேண்டும்.

 பாவம் எல்லாரும் செய்தார்கள், ஆனால் நான் பாவம் செய்தேன் என்று தாவீதைத் தவிர எத்தனை பேர் சொன்னார்கள்? அவன் சாக்குப்போக்கு சொல்லவில்லை.    நான் வைக்கப்பட்ட இடம் மோசம்  சாத்தான் என்னை ஏமாற்றிவிட்டான் என்று சொன்னானா? இல்லை.  கர்த்தர் தாவீதை நேசித்தார். அவன் என் இருதயத்திற்கு ஏற்றவன் என்று சொன்னார்.

 போக்குச் சொல்கிற ஒரு மனிதனும் கர்த்தருக்குப் பிரியமானவன் அல்ல.   போக்குச் சொன்னவர்களைப் பற்றி ராஜா சொன்னான் அவர்கள் ஒருவரும் என்னுடைய விருந்தை ருசி பார்ப்பது இல்லை, பிச்சைக்காரன் சப்பாணி ருசி பார்ப்பான். தெருவில் கிடக்கிறவன் ருசி பார்ப்பான். சுவிஷேசக் கூட்டங்களிலே, கன்வென்ஷனிலே அனுமதி இலவசம், பரலோகத்திலே அனுமதி இலவசம் அல்ல.  ஏன் இரட்சிக்கப்படவில்லை என்று கேட்டால் ஏதோ போக்குச் சொல்லலாம் என்று நினைக்காதே.

 இயேசுகிறிஸ்துவின் நாமமேயல்லாமல் நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே வேறொரு நாமம் கட்டளையிடப்படவில்லை (அப்.4:12).  நீ ஆலயத்திற்கு ஒழுங்காய் போவதினால் உனக்கு இரட்சிப்பு இல்லை.

 அப்போஸ்தலர் 10 ஆம் அதிகாரத்தில்  அவன் அதிகமாய் ஜெபிக்கிறவன், தான தர்மம் பண்ணுகிறவன், வீட்டார் அனைவரோடும் தெய்வ பக்தியாய் இருக்கிறவன்.    கொர்நேலியுவே பரலோகத்திற்கு வரவேண்டுமானால் பேதுருவைக் கூப்பிடு. அவன் பிரசங்கம் பண்ணுவான், நீ இரட்சிக்கப்படுவாய், நான் உன்னை அபிஷேகிப்பேன். அப்பொழுது நீ பரலோகத்திற்கு வரலாம்.

 பரலோகம் போக வேண்டுமானால் நீ இயேசுவை உன் சொந்த இரட்சகராய், பாவம் போக்கும் பரிகாரியாய் இயேசுவை விசுவாசி. அவர் என் பாவத்தை மன்னித்தார் என்று சொல்லக்கூடிய ஒரு தைரியம் உன்னிடத்தில் உண்டாகவேண்டும்.

ஞானஸ்நானத்தை இயேசு எடுத்தார். ஞானஸ்நானம் கொடுக்கும்படியாய் யோவானை அபிஷேகம் பண்ணி அனுப்பினார், என் பாவமெல்லாம் அந்த குளத்திலே, அந்த ஆற்றிலே மூழ்கிப் போனது என்று சொல்லிக் கொண்டு புதிதான ஜீவனுள்ளவர்களாய் இயேசுவோடு கைக் கோர்த்துக் கொண்டு நடக்கிறார்கள்.  இதுவரை இரட்சிக்கப்படாவிட்டால் ஏதாவதொரு சாக்குப்போக்கு சொல்லிக் கொண்டிருக்காதே.

 “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். அவர்கள் இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்”(யோவா1:12,13).

 இரட்சிக்கப்படாதவர்கள் என்ன சாக்குப்போக்கு சொன்னாலும் பிரயோஜனமில்லை.  “அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.”(எபி 2:4).

 ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரரிடம் சுவிசேஷம் சொல்லும்படியாக மூடி பிரசங்கியாரிடம்  ஆண்டவர் சொன்னார்.  அவனுடைய வீட்டிற்குப் போய் கதவைத் தட்டினார். கதவைத் தட்டினவுடன் அவன் கதவைத் திறந்தான். பிரசங்கியாரைப் பார்க்கும் பொழுது அவனுக்கு அற்பமாய்த் தெரிந்தது.

 அவர் சொன்னார், ஐயா நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டும்.   அவன் பொறுமையாய் நான் இரட்சிக்கப்பட வேண்டிய அவசியமில்லை.  ஏற்கனவே நான் நல்லவனாயிருக்கிறேன், ஒழுங்குள்ளவனாய் இருக்கிறேன், கோயிலுக்குப் போகிறேன் என்று வரிசையாய் அடுக்கிக் கொண்டே போனான். அப்பொழுது இந்த தேவமனிதர் சொன்னார், எல்லாம் சரிதான் ஐயா, நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டும்,

 அவன் தேவையில்லை என்று சொன்னான். சாக்குப்போக்கு சொன்னான். அப்பொழுது அவர் ஞானமான ஒரு   பேப்பரைக் கையில் எடுத்தார். இரட்சிக்கப்பட வேண்டாம் என்று நீங்கள் சொல்லுகிற காரியங்களையெல்லாம் சொல்லுங்கள் என்று சொன்னார். அவர் பேப்பரில் எழுதினார். எழுதி முடித்து விட்டு அவர் சொன்னார், ஐயா நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அது தேவனுடைய சித்தம்.

 ஒரு வேளை நீங்கள் மரித்துப் பரலோகம் போகிற வேளையில் இந்த பேப்பரைக் கொண்டு போய் கொடுத்து, ஆண்டவரே நான் இந்த இந்த காரியத்தில் இருக்கிறேன். எனக்கு பரலோகத்தில் இடம் வேண்டும் என்று கேளுங்கள் என்று சொல்லி பேப்பரைக் கொடுத்து விட்டு அவர் வந்து விட்டார்.

 இரவாயிற்று, விடியற்காலை நேரத்திலே கதவை பலமாய் ஓங்கித் தட்டுகிற ஒரு சத்தம் கேட்டது. அந்த மனிதன் தான் வந்து நிற்கிறார். பேப்பரோடு வந்து நிற்கிறார். ஐயா இரவெல்லாம் நான் தூங்கவில்லை. பேப்பரில் நீங்கள் எழுதித் தந்த காரியங்களை நான் பார்த்தேன். இவைகள் ஒன்றும் என்னை பரலோகத்தில் கொண்டு போய் சேர்க்காது. நான் பரலோகம் போய் சேரவேண்டும். தன் வாழ்க்கையை  அந்த இடத்திலேயே மூடியின் அறையிலேயே ஒப்புக் கொடுத்தார். அவர் தேவ மனுஷனானார்.

 விசுவாசமுள்ளவனாகி  ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான் என்று கர்த்தர் சொல்லியிருக்க நீங்கள் அதை எடுக்கவேண்டாமா? அந்த ஆதாமை ஆண்டவர் வெட்கப்படுத்தினார். அவன் போக்குச் சொன்னதினாலே மரத்திற்குப் பின்னாலே அத்தி இலையை உடுத்திக் கொண்டு நின்றான். அவனை      தெய்வ சமூகத்திலே கொண்டு வந்து நிறுத்தினார். ஆதாமே இந்த அத்தி இலையினாலே நீ பரலோகம் போகலாம் என்று நினைக்கிறாயா? இந்த அத்தி இலையினாலே உன்னுடைய நிர்வாணம் மூடும் என்று நினைக்கிறாயா?

 இந்த வெயில் அடித்தபொழுதே இந்த அத்தி இலை சுருங்கி விட்டதே. அப்படியானால் எப்படி நீ நிலைக் கொள்ளமுடியும்?  வெட்கத்தினால் தங்களை மூடிக் கொண்டார்கள் ஐயோ நாங்கள் நிர்வாணிகள்,  உன்னுடைய சொந்த பரிசுத்தம் தேவனுக்கு முன்பாய் உன்னை நிர்வாணியாக்கிவிடும். ஆகையினாலே இரட்சிப்பாகிய தேவநீதி, ஞானஸ்நானமாகிய தேவநீதி, பரிசுத்த ஆவியாகிய தேவநீதியை நீ தரித்துக் கொள்ளவேண்டும்.

 சிலவேளைகளில் கரண்ட் போய்விடுகிற நேரத்தில் ஜெனரேட்டரைப் போடுவார்கள்.  அதைப் போட்டவுடனே வருகிற சத்தம், கேட்க விருப்பமில்லைதான் ஆனாலும் என்ன செய்வது? கரண்ட் வேண்டுமே, சத்தத்திற்காக பரிசுத்தாவியை வேண்டாம் என்று சொல்லலாமா? ரோஜாப்பூ என்றால் எல்லோருக்கும் பிரியம். அந்த ரோஜாப்பூவை கர்த்தர் முள்ளுகளுக்குள் தான் வைத்திருக்கிறார்.

 பேக்டரிகளில் வேலை செய்பவர்கள்   அழுக்கு பட்டுவிடும் என்பதால் அந்த உடைகளைப் போட்டுக் கொண்டு வேலை செய்வார்கள். வெளியே வரும்பொழுது நல்ல உடை அணிந்து வருவார்கள். அழுக்கு உடையைப் போட்டுக் கொண்டு வெளியே வருவதற்கு அவர்களுக்கு விருப்பமில்லைதான். ஆனால் சம்பளம் வாங்கும்பொழுது சந்தோஷம்.

 பரலோகத்தின் முத்திரை  பரிசுத்த ஆவி. மீட்கப்படும் நாளுக்கென்று பெற்ற அச்சாரம் பரிசுத்த ஆவி. இந்த உலகத்தில் வல்லமையாய் ஜீவிப்பதற்கு  பரிசுத்தமாய் ஜீவிப்பதற்கு தேவன் தந்தது பரிசுத்த ஆவி. உனக்கு வேண்டியது ஆவியானவருடைய ஒரு பெரிய நிறைவு.   நீ போக்குச் சொல்ல ஆரம்பிக்காதே. இன்றைக்கு என்னுடைய வாழ்க்கையை ஒப்புக் கொடுத்துவிடுகிறேன் என்று ஒப்புக் கொடுங்கள்.

 எஸ்தருடைய சரித்திரத்தில் 4 ஆம் அதிகாரத்தில் தேசம் அழிவுக்கு நேராய் போகிறது. மொர்தெகாய் தரையில் உட்கார்ந்து இரட்டு வஸ்திரம் தரித்துக் கொண்டு அழுதுக் கொண்டே இருக்கிறான்.  இத்தனை கோடி ஜனங்கள் அழிகிறார்களே ஆண்டவரே இவர்களைக் காப்பாற்ற வழி என்ன என்று அழுதுக் கொண்டே இருக்கிறான்.

அவனுடைய மனதிலே ஒரு எண்ணம், என் வளர்ப்பு மகளான எஸ்தர் மாத்திரம் இப்பொழுது துணிந்து விடுவாளானால் நம்முடைய ஜனத்திற்கு ஒரு மீட்புக் கிடைக்குமே  எஸ்தருக்கு ஒரு கடிதம் கொடுத்து அனுப்பினான். அவள் ஒரு சாக்குப்போக்கு சொன்னாள்.  ராஜாவினிடத்தில் போக முடியாது.   அழைக்கப்படாமல் நான் போகமுடியாது.   போனால் செத்துப் போவேன் என்று சாக்குப்போக்கு சொன்னாள்.

 எஸ்தர் நீ யாரென்று உனக்குத் தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்பு இதே யூத ஜாதியில் நீ ஒரு அங்கமாய் இருந்தாய் தெரியுமா? யூதர்களுக்கு விரோதமாய் சட்டம் இயற்றப்பட்டால் சாகிறவர்களுடைய வரிசையில் நீயும் உண்டு, மறந்துவிடாதே. உனக்கு கிருபையாய் ராஜ மேன்மை கிடைத்தது.  மற்றவர்களைத் தப்ப வைக்கும்படியாய், மற்றவர்களை மீட்கும்படிக்கே உன்னை இந்த ஸ்தானத்தில் தேவன் வைத்திருக்கிறார் தெரியுமா? ஜனத்திற்காக துணிந்துவிடு. ஜனத்திற்காக உன் வாழ்க்கையை ஒப்படைத்துவிடு.

 நீங்களும் மற்றவர்களும் எனக்காக ஜெபம் பண்ணுங்கள். நானும் தாதிமாரும் மூன்று நாட்கள் உபவாசிப்போம். துணிந்து செத்தாலும் சாகிறேன். என் ஜனத்திற்காக ராஜ சமூகத்தில் போவேன் என்றாள்.   உன் சொந்த நன்மைக்காகவே வாழ்ந்து கொண்டு நீ அதற்காக போக்கு சொல்கிறாயா? என் சொந்த உழைப்பினால் எல்லாவற்றையும் செய்து கொள்வேன் என்று போக்கு சொல்கிறாயா? இல்லை. கர்த்தருடைய ஆவியானவர் பேசுவாரானால் ஒப்புக்கொடு.

 அவர்கள் போக்குச் சொன்னார்கள், ராஜாவுடைய விருந்தை அவர்கள் ருசி பார்ப்பதில்லை என்று ராஜ சமூகத்தில் இருந்து கட்டளை பிறந்தது.    ஆயிரங்கள் அழிந்துக் கொண்டிருக்கும்பொழுது ஊழியம் செய்துக் கொண்டிருக்கிறவர்களே, நீங்கள் சுகபோகமாக இருக்க கர்த்தர் இடம் கொடுப்பார் என்று நினைக்கிறீர்களா? ஆத்துமாக்களுக்காய் நீ பாரப்படாவிட்டால் கர்த்தர் ஊழியக்காரனுக்குரிய அந்த மதிப்பை உனக்குத் தரப்போவதில்லை.

 ஆண்டவர் கொடுக்கிற வஸ்திரத்தையும் ஆண்டவர் கொடுக்கிற மேன்மையையும் அனுபவித்துக் கொண்டு ஆத்துமாக்களைக் குறித்த பாரமற்ற ஊழியக்காரனே, ஊழியக்காரியே உனக்கு நேராய் தேவ வார்த்தை வருகிறது. கர்த்தர் உனக்கு தந்திருக்கிற மேன்மையை இழந்துவிடாதே. என்னால் இனி முடியாது என்று போக்குச் சொல்கிறாயா? போக்குச் சொன்னவர்கள் ராஜாவின் விருந்தை ருசிப் பார்க்கவில்லை.

போக்குச்சொல்ல! : பாஸ்டர் . தாமஸ் - தமிழ் பிரசங்கங்கள் | Tamil Christian Message | Sermon Notes Reviewed by Nethanathaneal on 15:44:00 Rating: 5 போக்குச்சொல்ல! Stop Making Excuses, Start Making Progress தமிழ் பிரசங்கங்கள் | Tamil Christian Message | Sermon Notes இயேசு மிகவும் மென்மையா...

No comments: